ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் குளறுபடி... காசு திருப்பி தரப்படுமா? மன்னிப்புடன் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விளக்கம்
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடிகள் ஏற்பட்டதற்காக அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் எப்படா சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவார் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களை, இனி தயவு செஞ்சு சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்திவிடாதீர்கள் என சொல்ல வைக்கும் அளவுக்கு நேற்று நடந்து முடிந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி. சென்னை பனையூரில் உள்ள ஆதித்ய ராம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்காக காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களால் கூட நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை.
அந்த அளவுக்கு மோசமாக நிகழ்ச்சி ஏற்பாடு இருந்துள்ளது. 5 ஆயிரம், 10 ஆயிரம் என பல ஆயிரக்கணக்கில் டிக்கெட் வாங்கியவர்களால் அந்த மைதானத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காசு கொடுத்தும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பியவர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதையும் படியுங்கள்... ஆள விடுங்கடா சாமி... ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு வந்து தலைதெறிக்க ஓடிய ரசிகர்கள் - காசெல்லாம் வேஸ்ட் என குமுறல்
இதனால் ஏ.ஆர்.ரகுமான் கான்செர்ட் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆனது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்ததே இந்த குளறுபடிக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமான நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இதுகுறித்து பதிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளனர்.
அதில், சென்னைக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி. ஏகோபித்த வரவேற்பு மற்றும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சக்சஸ் ஆகி உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் காசை எப்போ திருப்பி தருவீங்கனு சொல்லவே இல்லயே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தின் அதிரிபுதியான வெற்றியால் மளமளவென உயர்ந்த சன் டிவி பங்குகள்... ஆத்தாடி ஒரே மாதத்தில் இவ்வளவா?