கடந்த சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்த படம் பாகுபலி, இந்த படத்தை தொடர்ந்து நாகார்ஜூனா,   பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, உள்ளிட்டோர் நடித்து பிரமாண்டமாக உருவாகியுள்ள  அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

ராமா என்ற வெங்கடேச பெருமாள் பக்தனின் உண்மைச் சம்பவத்தை  மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள இந்த படத்தை  இயக்கி இருப்பவர்  'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குரு கே.ராகவேந்திர ராவ்.

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்காவை நடிக்க வைத்துள்ளனர்.

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வெங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

'பாகுபலி'க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். 

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம்,  வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம்,  ராமா என்பவர்   ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக்காரணம்,  திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும்  பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற  விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக அமைத்து தெளிவு படுத்தியுள்ளனர்.

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.