மகாராஜா படத்தால் அனுராக் காஷ்யப்புக்கு அடித்த ஜாக்பார்ட்!
மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப்பின் நடிப்பைப் பார்த்து இயக்குநர் அலெஜான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டூ தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததாக தகவல்.

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் அலெஜான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டூ, அனுராக் காஷ்யப்பை மகாராஜா படத்தில் நடித்ததைப் பார்த்து தனது அடுத்த படத்தில் நடிக்க அழைத்ததாக இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கலாட்டா விருது விழாவில் நிதிலன் இதுகுறித்துப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“நான் அனுராக் சாரின் தீவிர ரசிகன். சமீபத்தில்,அவரது மகளின் திருமணத்திற்காக மும்பைக்குச் சென்றிருந்தேன். மகாராஜா படத்தைப் பார்த்த பிறகு, இனாரிட்டூ தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததாக அவர் என்னிடம் கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் அவரை மிகவும் விரும்புகிறேன்." - என்று வீடியோவில் நிதிலன் சுவாமிநாதன் கூறுகிறார்
மகாராஜா படத்தை அலெஜான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டூ பார்த்தது தமிழ் சினிமாவுக்குப் பெருமையை சேர்க்கிறது. ஹாலிவுட் இயக்குநர்களும் கூட இந்தியப் படங்களைப் பாராட்டுகிறார்கள் என்பதை நிதிலன் சுவாமிநாதனின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
இனாரிட்டூவின் படத்தில் அனுராக் காஷ்யப் நடிப்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அனுராக் காஷ்யப்பும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் டாம் க்ரூஸ் நடிக்கும் தனது அடுத்த ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இனாரிட்டூ தயாராகி வருவதாக வெரைட்டி இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்த ஆண்டு தமிழில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக மகாராஜா திகழ்கிறது. இந்தியாவில் மட்டும் 71.30 கோடி ரூபாய் வசூலித்த இப்படம், உலகம் முழுவதும் 109.13 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கொரங் பொம்மை படத்தைத் தொடர்ந்து நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய படம் இது.

