சமீபத்தில் நெட் ஃபிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி படமான 'லஸ்டு ஸ்டோரிஸ்' அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள் கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இயக்கி இருந்தனர். 

'லஸ்டு ஸ்டோரிஸ்' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தமிழில் உருவாகும் ஆந்தாலஜி படம் ஒன்றை வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நான்கு இயக்குநர்கள், ஒவ்வொரு கதையை எழுதி இயக்குகின்றனர். 

இதில், விக்னேஷ் சிவன் இயக்கும் போர்ஷனுக்கான படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதில், முக்கிய கேரக்டரில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், தான் இயக்கும் போர்ஷனுக்கான பணிகளில் தீவிரமாக உள்ளார். 

அவர் இயக்கும் போர்ஷனில் நடிப்பதற்காக 'ரவுடி பேபி' சாய்பல்லவி கமிட்டாகியுள்ளார். தனுஷின் 'மாரி-2' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே.' படத்திற்கு பிறகு, சாய் பல்லவி நடிக்கும் படம் இது. 

மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரகாஷ் நடிக்கவுள்ளார். கடைசியாக, வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் வழக்கறிஞராக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். விரைவில், வெற்றிமாறன் இயக்கும் போர்ஷனுக்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கவுதம் மேனன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் இயக்கும் போர்ஷனுக்கான படப்பிடிப்பும் தொடங்கும் என தெரிகிறது. இவ்விரு இயக்குநர்களின் கதைகளில் நடிக்கும் நடிகர், நடிகையர் யார்? என்பது குறித்த தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம்.