வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தன்னுடைய 65 வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், அதே தேதியில் ரஜினியின் ‘தர்பார்’பட தீம் மியூசிக்கையும், மோஷன் போஸ்டரையும் வெளியிடப்போவதாக அப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தெரிவித்துள்ளார். 

‘தர்பார்’படப்பிடிப்பு முடிந்து அடுத்த பட அட்வான்ஸ் வாங்கிய கையோடு இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி சுவாமிகள், சுமார் பத்து தினங்களுக்குள் சென்னை திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் 29 முடிந்து தனது 30 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கும் அதிர்ஷ்டக்கார இசையமைப்பாளர் அனிருத் தனது பிறந்த நாள் செய்தியாக ‘தர்பார்’படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார்.

அதில்,...இந்த இனிய நன்னாளில் [யாருக்கு பாஸ்?]  ‘தர்பார்’படம் குறித்த உற்சாகமான அப்டேட் ஒன்றைப் பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன். தலைவர் ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘தர்பார்’படத்தின் தீம் மியூசிக்கும், மோஷன் போஸ்டரும் வரும் நவம்பர் 7ம் தேதியன்று அதிரடியாக வெளியிடப்படும் என்று ட்விட் செய்திருக்கிறார். நவம்பர் 7ம் தேதி கமலின் பிறந்தநாள் என்பது ரஜினிக்குத் தெரியும். ஆனால் அனிருத்துக்குத் தெரியாததால் ஒரு ஆர்வக்கோளாறில் அவர் ட்விட் பண்ணியிருக்கிறார். கண்டிப்பாக இச்செய்தி ரஜினியின் பார்வைக்குச் செல்லும்போது அதை அவர் மாற்றச்சொல்வார் என்றே தெரிகிறது.

தமிழ் சினிமாவின் மூன்று பிரம்மாண்டமான படங்களான ‘இந்தியன் 2’,’தர்பார்’,’தளபதி 64’ ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது கொடூரமாக கவனிக்கத்தக்கது.