நவம்பர் இறுதிக்குள் முடித்தே ஆகவேண்டியிருக்கும் ஷங்கரின் ‘இந்தியன் 2’படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் இந்திப்பட ஹீரோ அனில் கபூர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இதே கேரக்டரில் நடிப்பதாக இருந்த அஜய் தேவ்கன் கால்ஷீட் பிரச்சினைகளால் திடீரென்று பின்வாங்கியதைத் தொடர்ந்து தனது முன்னாள் ஹீரோ அனில்கபூரை வில்லனாக்கியிருக்கிறார் ஷங்கர்.

காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகிய பெரும்பட்ஜெட் நட்சத்திரங்கள் ஏற்கனவே கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. அங்கு சித்தார்த், ரகுல் பிரீத் சிங் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர். வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கமல்ஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியும் படமாக்கப்பட்டது. 

அடுத்து இரு வாரங்களுக்கு முன்பு துவங்கிய அடுத்த கட்டப்படப்பிடிப்பு  ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜெயிலில் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வந்தனர். கமல் ஏற்கனவே படப்பிடிப்பு தேதிகளை மானாவாரியாக மாற்றிக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் இருவரும் ஜகா வாங்கிய நிலையில்  தற்போது அனில்கபூர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 படப்பிடிப்பு அரங்கில் அனில்கபூர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஷங்கரின் இயக்கத்தில் முதல்வன் பட ரீமேக்கான ‘நாயக்’படத்தின் இந்தி ரீ மேக்கில் நடித்த அனில்கபூர்தான் மணிரத்னத்தின் முதல் கன்னடப்படமான பல்லவி அனு பல்லவி பட ஹீரோ என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்?