கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு செப்டம்பர் 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு எஸ்.பி.பி. செப்டம்பர் 15ம் தேதி காலமானார். 

இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனது இனிய குரலில் இசையுலகை ஆண்ட அவருடைய பிரிவை ஏராளமானோரால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஆந்திர மாநிலம் நெல்லூரைப் பூர்விகமாகக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஏற்கனவே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், எஸ்.பி.பாலசுப்ரமணியதிற்கு 'பாரத ரத்னா' வழங்கவேண்டுமென பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தற்போது, ஆந்திர அரசு, நெல்லூரில் உள்ள இசை மற்றும்  நாட்டியப் பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியதின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.

 

இதையும் படிங்க: கொழு, கொழு குழந்தை முதல் ‘குட்டி’ நயனாக மாறியது வரை... அனிகாவின் யாரும் அதிகம் பார்த்திடாத போட்டோஸ்....!

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாபெரும் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் பெயரை, 'டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளி' என மாற்ற அரசு முடிவு செய்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், இந்த கவுரவத்திற்காக ஆந்திர அரசுக்கும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் நன்றியுடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.