விருமாண்டி யூனிவர்ஸில் சேயோன்... காந்தாரா பாணி கதையா? வியக்க வைக்கும் பின்னணி..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான சேயோன், விருமாண்டி யூனிவர்ஸில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் கதை விவரமும் கசிந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Seyon Movie Connection With Virumandi
சிவகார்த்திகேயனின் சேயோன் பட டீசர் அண்மையில் வெளியானது, அதில் எஸ்.கே, கருமாத்தூர் விருமாண்டி சாமியாக தோன்றி இருப்பார். அந்த டீசரில் இடம்பெறும் மற்றொரு சீனில் வள்ளி திருமணம் நாடகம் போட்டவர்களை அடித்திருப்பார்கள். முருகனுக்கும் விருமாண்டிக்கும் அப்படி என்ன மோதல் என்பது தான் இந்த சேயோன் படத்தின் கதைக்கரு. விருமாண்டி சாமி கும்பிடுபவர்கள் முருகனை கும்பிட மாட்டார்களாம். விருமாண்டி படத்திலும் இதுபோன்ற ஒரு பாடல் இடம்பெற்று இருக்கும். அதனால், விருமாண்டி யூனிவர்ஸில் தான் சேயோன் படமும் இருக்கும் என யூகிக்கப்படுகிறது.
சேயோன் படத்தின் கதை
முன்பு கருமாத்தூர் காவல் தெய்வமாக பேய்க்காமன் இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் கருமாத்தூரில் உள்ள சிலருக்கும் பேய்க்காமன் குலசாமியாக இருக்கிறார். பேச்சியம்மன் அந்த ஊருக்கு வரும்போது அவங்களுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால் பேச்சியம்மன் அந்த ஊருக்கு காவல் தெய்வமாக மாற நினைத்திருக்கிறார். ஆனால் பேய்க்காமன் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார். இந்த பேய்க்காமனை அடக்க பேச்சியம்மன் முதலில் சிவனிடம் சென்று உதவி கேட்டாராம். சிவன் தவத்தில் இருந்ததால் அவரால் வரமுடியாமல் போய் இருக்கிறது.
பேய்க்காமன் vs விருமாண்டி
அதனால் தன்னோட அண்ணனான விருமாண்டி மலையாள தேசத்தில் இருந்ததால், பேச்சியம்மன் இங்கிருந்து சென்று விருமாண்டியை கூப்பிடுகிறார். அவருக்கு அங்கு சகலமும் கிடைக்கிறது. இருந்தாலும் நீ கூப்பிடுவதால் நான் அங்கு வருகிறேன். ஆனால் அங்கு எனக்கு ஆறு வேளை பூஜையும், கர்ப்பமாக இருக்கும் பெண்ணும், கர்ப்பமாக இருக்கும் மாடும் தனக்கு தினமும் படையலாக வேண்டும் என கேட்டிருக்கிறார். பேச்சிக்கு இதை கொடுக்க முடியாது என தெரியும். இருந்தாலும் பேய்க்காமனை அடக்க வேறு வழியில்லாததால், பொய் சொல்லி விருமாண்டியை அங்கிருந்து அழைத்து வருகிறார்.
ரேஸ் நடத்தும் முருகன்
மலையாள தேசத்தில் இருந்து வரும் விருமாண்டிக்கும், பேய்க்காமனுக்கும் சரியான மோதல் நடக்கிறது. இந்த சண்டையில் விருமாண்டி பேய்க்காமனோட குதிரையின் காலை உடைத்துவிடுகிறார். இந்த சண்டை உச்சபட்சத்துக்கு செல்கிறது. இதன்பின்னர் மதுரையில் இருந்து சொக்கன், மீனாட்சி மற்றும் முருகன் ஆகியோர் பஞ்சாயத்து பண்ண வருகிறார்கள். அப்போது இதை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார்கள் அந்த பஞ்சாயத்தில் முருகன் தான் நாட்டாமையாக இருக்கிறார். இந்த பஞ்சாயத்தில் பேய்க்காமனுக்கும், விருமாண்டிக்கும் கருமாத்தூரில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்ட கோபுரம் வரை ரேஸ் வைக்கிறார்கள்.
பேச்சியம்மனின் சாபம்
விருமாண்டி பேய்க்காமன் குதிரையின் காலை உடைத்துவிட்டதால், பேய்க்காமனிடம் நல்ல குதிரை இல்லை. ஆனால் விருமாண்டியிடம் நல்ல குதிரை இருக்கிறது. இதைப்பார்த்த முருகன், இருவருக்கும் குதிரையை மாற்றிவிடுகிறார். விருமாண்டிக்கு நொண்டிக் கால் குதிரையும், பேய்க்காமனுக்கு நல்ல குதிரையையும் கொடுக்கிறார். முருகன் நொண்டிக்கால் குதிரையை கொடுத்ததால் தான் விருமாண்டி தோத்துப்போனதாக சொல்லும் பேச்சி, அதனால் முருகனை இனி நாங்க யாருமே கும்பிட மாட்டோம். அதைத் தாண்டி யாராவது சென்றால் அவங்க குடும்பமே அழிந்துவிடும் என பேச்சியம்மாள் சாபம் விட்டதாக சொல்கிறார்கள்.
விருமாண்டிக்கு ஆடி வெள்ளி பூஜை
விருமாண்டி கேட்டதையெல்லாம் தன்னால் கொடுக்க முடியாது என தெரிந்த பேச்சியம்மாள், விருமாண்டியை அடக்க தன்னுடைய மோதிரத்தை கழட்டி ஒரு கிணற்றுக்குள் போடுகிறார். விருமாண்டியை அதை எடுத்து தர சொல்ல, அவரும் எடுக்க கிணற்றுக்குள் சென்ற நிலையில், அப்போது அவரை ஒரு சங்கிலியால் உள்ளே கட்டிப்போட்டு, ஒரு கல்லை வைத்து கிணற்றை அடைக்கிறார். நீ சொன்னதைக் கேட்டு உள்ள வந்தேன். நீ இப்படி அடைச்சிட்டியேனு விருமாண்டி கேட்கையில், உனக்கு ஆடிவெள்ளி உச்சி பூஜையன்று மட்டும் நீ கேட்டதை கொடுக்கிறோம். கர்ப்பமாக இருக்கும் பெண்ணையும், கர்ப்பமான மாடையும் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக கர்ப்பமான ஆட்டை கொடுக்கிறேன் என சொல்லி இருக்கிறார் பேச்சி.
கோலிவுட்டின் காந்தாராவா சேயோன்?
அந்த ஆடி வெள்ளி பூஜையின் போது மட்டும் தான், விருமாண்டி அந்த கிணற்றுக்குள் இருந்து வெளியே வருவார் என நம்பப்படுகிறது. இந்த ஆடி வெள்ளி பூஜை எப்படி நடக்கும் என்பதை விருமாண்டி திரைப்படத்தில் காட்டி இருப்பார்கள். அப்படத்தில் ஒரு பாடலில் காட்டிய விஷயத்தை ஒரு படமாக எடுக்க இருக்கிறார். அநேகமாக சேயோன் படத்தில் கமல்ஹாசனும் கேமியோவில் வர வாய்ப்பு இருக்கிறது. காந்தாராவை போல் இதும் நம் மண்ணின் ஒரு தெய்வ வழிப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

