Amma water in cinema theatre and no parking fees
தமிழக திரையரங்குகளில் இனி அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் தெரிவித்தார்.
தமிழ் திரைப்படங்களுக்கு அரசு 10 சதவீத கேளிக்கை வரியை நிர்ணயம் செய்தது உத்தரவிட்டது. ஆனால் 10 % கேளிக்கை வரியை தங்களால் தாங்க முடியாது என்றும், அதனால் இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரையுலகினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை வலியுறுத்தி கடந்த 2 வாரங்களாக புதிய திரைப்படங்கள் திரையிடப்படவில்லை.
இந்நிலையில் கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக சினிமா திரையுலகினரை தமிழக அரசு அழைத்து பேசியது. அரசு தரப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி பங்கேற்றனர்.
தமிழ் திரையுலகினர் தரப்பில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கம், சினிமா வினியோகஸ்தர்கள் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்றன. 3 நாட்களாக தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, திரையுலகினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், இனி திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவித்தார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த விஷால், தியேட்டர் கேண்டீன்களில் உணவுப்பொருட்கள் எம்ஆர்பி விலையில்தான் விற்க வேண்டும் எனவும் கூறினார்.
திரையரங்குகளுக்கு தண்ணீர் கொண்டுவர பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், அம்மா வாட்டர் விற்பனை செய்யப்படும் எனவும் விஷால் தெரிவித்தார்.
பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், விரைவில் ஆன்லைன் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் விஷால் உறுதி அளித்தார்.
