நடிப்பில் ஏற்கனவே பல இமாலய சாதனைகளைப் புரிந்துள்ள உயர்ந்த மனிதன் அமிதாப் பச்சன் நேற்று ஒரே டேக்கில் 14 நிமிடக் காட்சி ஒன்றில் நடித்து மேலும் ஒரு அபார சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

’கலி கலி சோர் ஹை’,’லைஃப் பார்ட்னர் ஆகிய படங்களை இயக்கியுள்ள  இயக்குநர் ரூமி ஜாஃப்ரியின் இயக்கத்தில் உருவாகிவரும் 'சேஹ்ரா’ ' என்ற இந்தி திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வருகிறார். ஆனந்த் பண்டிட் தயாரிக்கும் இதில் அமிதாப்பச்சன் வழக்கறிஞராக நடிக்கிறார். மேலும் இதில் இம்ரான் ஹாஸ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பின், கடைசி காட்சி நேற்று ஜூன் 16 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு பற்றிக் கூறி நடிகர் ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அகில் 'நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள், இந்திய சினிமாவில் மற்றொரு வரலாற்றை பதிவு செய்துள்ளார். ‘செஹ்ரா’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின், கடைசி நாள் அவர் ஒரே ஷாட்டில் பதினான்கு நிமிட நீள காட்சியை நடித்தார், ஒட்டுமொத்த படக்குழுவினரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்... டியர் சார், சந்தேகமே இல்லை, நீங்கள் உலகில் சிறந்த நடிகர்களுல் ஒருவர்' என்று அமிதாப்பச்சனை புகழ்ந்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அமிதாப் நடித்த ஒரே படமான ‘உயர்ந்த மனிதன்’ தயாரிப்பாளர்களுடன் அவருக்கு ஏற்பட்டுள்ள கருத்து மோதலால் கால்வாசி முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.