அமீர் இயக்கிய "மெளனம் பேசியதே", "ராம்", "பருத்திவீரன்" ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மைல்கள் பதித்ததோடு மட்டுமல்லாது, சூர்யா, ஜீவா, கார்த்தி ஆகியோருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. சிறந்த இயக்குர் என்பதை நிரூபித்த அமீர், அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அமீர் நடித்த "யோகி", "வடசென்னை" ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் "வடசென்னை" படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அமீர், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார். 

'முகவரி', 'காதல் சடுகுடு',  'நேபாளி' உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட் துரை புதிதாக இயக்கி வரும் படத்தில் அமீர் நடிக்க உள்ளார். "நாற்காலி" என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் அமீர் அரசியல்வாதியாக நடிக்க உள்ளார். மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிக்கும் அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து மேடைகளில் அரசியல் பேசி வரும் அமீர், இப்போது திரைப்படங்களிலும் அரசியல் கருத்துக்களை முன்வைக்க வந்துவிட்டார். இரவோடு இரவாக மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிடுவது போல் சைடு லுக் போஸ்டர் வெளியான நிலையில், அமீரின் மொத்த அவதாரத்தையும் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.