கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்பதால் மக்கள் தங்களுடைய நாட்களை இணையத்தில் செலவிட்டனர். பெரும்பாலும் ஓடிடியில் சினிமா, வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அத்துடன் ஆன்லைன் வெப் தொடர்களில் ஆபாசம், படுக்கையறை காட்சிகள், மன உணர்வுகளை புண்படுத்துவது, இந்து கடவுள் அவமதிப்பு உள்ளிட்ட காட்சிகள்  இடம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

கடந்த ஜனவரி 16ம் தேதி அன்று அமேசான் பிரைமில் வெளியான தாண்டவ் வெப் தொடருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சைஃப் அலிகான், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரில் இந்து மத கடவுள்களை அவமதித்ததாக இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பை நிறுத்த வலியுறுத்தி கடும் போராட்டங்கள் வெடித்தது. தாண்டவ் படத்தின் தயாரிப்பாளர் மன்னிப்பு கோரியதோடு, 2 காட்சிகளை நீக்கிய பின்னரே சர்ச்சை சற்றே தனிந்தது. இருப்பினும் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதற்குள் அமேசான் பிரைமில் வெற்றிகரமாக ஓடிய மிர்சாபூர் வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மிர்சாப்பூரின் இமேஜை கெடுக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வெப் சீரிஸின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.