கமலுடன் ‘வளையோசை கலகலவென’ ரஜினியுடன் ‘வா வா அன்பே வா’ மம்முட்டியுடன் ‘கல்யாணத்தேன் நிலா காய்ச்சாத பால் நிலா’என்று மறக்க முடியாத காதல் நினைவுகளை வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்ற நடிகை அமலா 28 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

’86ம் ஆண்டு வெளியான டி.ராஜேந்தரின் ‘மைதிலி என்னைக் காதலி’ மூலம் தமிழ் ரசிகர்களின் காதல் வலையில் விழுந்தவர் அமலா. அடுத்து ‘மெல்லத் திறந்தது கதவு’படத்தின் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவின் கதவு அகலத் திறந்தது. அடுத்து கமல்,ரஜினி,விஜய்காந்த்,மோகன் ஆகிய அனைத்து முன்னணி நட்சத்திரஙளின் படங்களிலும் நாயகியாகக் கொடிகட்டிப்பறந்த அவர் தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.

‘87ல் தெலுங்குப் படங்களிலும் பிசியாக நடிக்கத் துவங்கிய அமலா அதே ஆண்டில் ‘உதயம்’ உட்பட மூன்று படங்களில் இணைந்து நடித்தபோது நடிகர் நாகார்ஜுனாவுடன் காதல் வயப்பட்டு ‘92ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். அதையொட்டி தனது படங்களுக்கு விடை கொடுத்த தமிழில் கடைசியாக நடித்த படம் இயக்குநர் ஃபாசிலின் ‘கற்பூர முல்லை’. இதில் ஸ்ரீவித்யாவின் மகளாக நடித்திருந்தார்.

அடுத்து தனது இரு மகன்களும் நடிகர்களான பிறகு ஒன்றிரண்டு தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த அமலா மெல்ல வெப் சீரீஸ்கள் பக்கமும் தலைகாட்டத் துவங்கியுள்ளார்.இந்நிலையில் அமலா, மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ‘கைதி’ தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இது சம்பந்தமாகப் பேசிய எஸ்.ஆர்.பிரபு, எனது அடுத்த படத்தின் இயக்குநர் கார்த்திக் என்னிடம்  ஒரு கதையை சொன்னார். அப்போது அவர் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு நடிகை அமலா பொருத்தமாக இருப்பார் என்றார். அதன் படி அவரை சந்தித்து சில மாதங்கள் முன் கதையை விளக்கினேன். அதை கேட்டதும் அவர் உற்சாகமானார். இந்தக் கதை நிச்சயம் தமிழில் வெற்றி பெறும்.எனவே கண்டிப்பாக நடிக்கிறேன் என்று உறுதியளித்துள்ளார் என்றார்.