’பா.ஜ.க.வின் ‘பி’ டீம் என்று விமர்சிக்கப்பட்டபோது கோபமடைந்த கமல் தேர்தலுக்குப் பிறகு தேவைப்பட்டால் பா.ஜ.கவுக்கு ஆதரவளிப்போம் என்று பேட்டியளித்து மக்கள் நீதி மய்யத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு ‘பொட்டி வந்துருச்சா பாஸ்’ என்று இணையங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பிரபல பத்திரிகையாளர் பிரணாய் ராய்க்கு பிரத்யேக பேட்டி ஒன்றில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பதில் அளித்த கமல்,” தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் தேசிய கட்சி கிடையாது. மாநில கட்சி. எங்களால் மூன்றாவது அணியையும் உருவாக்க முடியாது. அதனால் ஏதாவது ஒரு தேசிய கட்சிக்குத்தான் தமிழக நலனுக்காக ஆதரவு அளித்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அவரது பேட்டியில்,”நான் அரசியலுக்கு வர என் கோபம்தான் காரணம். என் இயலாமை, மாற்றம் வேண்டும் என்ற தேவைதான் காரணம். நான் அதில்தான் கவனம் செலுத்த போகிறேன். இது வெறும் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் கிடையாது. இது நம் அடையாளத்தை முன்னிறுத்த போகும் தேர்தலாக இருக்கும். 

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் நாங்கள் பா.ஜ.க.வுடன் இணைந்தால் அது அ.தி.மு.க. கூட்டணி இணைந்ததுபோல் அவ்வளவு சாதாரணமாக இருந்துவிடாது. மிகக் கடுமையான நிபந்தனைகளுடனே எங்கள் ஆதரவு இருக்கும். எங்களுடைய பல தர்ம சங்கடமான கேள்விகளை பா.ஜ.க. எதிர்கொள்ள நேரிடும்” என்கிறார் கமல்.