நேரடித் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கவேண்டும் என்ற தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் ஆசை இயக்குநர் ஏ.ஏர். முருகதாஸ் மூலம் மிக பிரம்மாண்டமாக நிறைவேறவிருக்கிறது. யெஸ் முருகதாஸின் அடுத்த பட ஹீரோ அல்லு அர்ஜுனேதான் என்பது ஏறத்தாழ கன்ஃபர்ம் ஆகிவிட்டது.

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லுஅர்ஜூன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் டப்பிங்  செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன.ஆனாலும் இவருக்கு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இதை  கடந்த 5 வருடங்களாக தனது பெரும்பாலான பேட்டிகளில் பெருமூச்சு கலந்த ஏக்கத்தோடு சொல்லியிருக்கிறார் அவர்.

அதற்காகப் பல இயக்குநர்களோடு பேசி வந்திருக்கிறார். இதுவரை சரியாக அமையவில்லை.ஞானவேல்ராஜா தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் அல்லுஅர்ஜூன் நடிக்கிறார் என்று சொல்லி பெரிய அளவில் தொடக்கவிழா நடத்தினார்கள். ஆனால் அப்படமும் விழாவோடு நின்று போனது.

இந்நிலையில் இப்போது அல்லுஅர்ஜூனின் ஆசை நிறைவேறவிருக்கிறதாம்.ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்லுஅர்ஜூன் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தயாராகவிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது. ரஜினி நடிக்கும் தர்பார் படத்துக்குப் பிறகு அல்லுஅர்ஜூன் படத்தை இயக்கவிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.இந்தப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் கலைப்புலிதாணு தயாரிக்கவிருக்கிறாராம்.தாமதமானாலும் பெரிய இயக்குநர் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஆகியோர் மூலம் தமிழுக்கு வருகிறார் அல்லுஅர்ஜூன். வெல்கம் பாஸ்.