நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி, அல்லு கனகரத்னம், 94 வயதில் ஹைதராபாத்தில் காலமானார். உடல்நலக்குறைவால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

Allu Arjun Grandmother Death : தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பாட்டி, அல்லு கனகரத்னம், ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலமானார். ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடைசி மூச்சை விட்டார். 94 வயதான அல்லு கனகரத்னம், புகழ்பெற்ற நடிகர் அல்லு ராமலிங்கையாவின் மனைவி. அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுனின் பாட்டி மறைவு

அல்லு கனகரத்னம் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், வயது மூப்பின் காரணமாக இறந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல்லு-கொனிடெலா குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த அல்லு அரவிந்தின் இல்லத்தில் கூடினர். அவரது இறுதிச் சடங்குகள் கோகாபேட்டில் நடைபெற்றது.

அல்லு அர்ஜுன் தனது பாட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவரது பாட்டி இறந்தபோது, அட்லீயுடன் AA22xA6 படப்பிடிப்பிற்காக மும்பையில் இருந்தார். இந்த செய்தியைக் கேட்டதும், உடனடியாக ஹைதராபாத் திரும்பினார். விமான நிலையத்தில் அவர் மிகவும் சோகமாக இருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த செய்தியை அறிந்த நடிகர் ராம் சரண், மைசூரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் திரும்பினார்.

அல்லு அர்ஜுனின் பாசக்கார பாட்டி

புஷ்பா 2 வெளியீட்டின் போது, அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் ஒரு இரவு சிறையில் கழித்து வீடு திரும்பியபோது, அவரது பாட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அல்லுவை தீய கண்ணில் இருந்து காப்பாற்ற ஒரு சடங்கை அவர் செய்தார். பின்னர் அல்லு வீட்டிற்கு வந்ததும், அவரை கட்டிப்பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். தன்னுடைய பாசக்கார பாட்டியின் மறைவால் மனமுடைந்துபோய் உள்ளார் அல்லு அர்ஜுன். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.