Alia Bhatt : RRR பட போட்டோஸை நீக்கியது நிஜம் தான்... ராஜமவுலி மீது கோபமா? - உண்மையை போட்டுடைத்த ஆலியா பட்
Alia Bhatt : இயக்குனர் ராஜமவுலி மீதுள்ள கோபத்தில் நடிகை ஆலியா பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஆர்.ஆர்.ஆர் பட போட்டோஸை நீக்கி விட்டதாக சொல்லப்பட்டது.
ஆலியா பட்டுக்கு சின்ன ரோல்
ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளதால், இப்படத்தில் தமிழ், இந்தி போன்ற பிறமொழிகளை சேர்ந்த பிரபலங்களையும் நடிக்க வைத்துள்ளனர். அந்த வகையில், இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட்டும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஹீரோயின் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த ஆலியா பட், படத்தில் சில நிமிடங்களே வருவதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். மேலும் நடிகை ஆலியா பட்டும் இதனால் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. இயக்குனர் ராஜமவுலி மீதுள்ள கோபத்தில் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஆர்.ஆர்.ஆர் பட போட்டோஸை நீக்கி விட்டதாக சொல்லப்பட்டது.
ராஜமவுலி மீது கோபமா?
இந்நிலையில், இதுகுறித்து நடிகை ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “‘ஆர்.ஆர்.ஆர்’படக்குழு மீது உள்ள அதிருப்தியால், அப்படம் தொடர்பான பதிவுகளை, நான் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியதை அறிந்தேன்.
இன்ஸ்டாவில் தற்செயலாக நடந்த விஷயத்தை வைத்து, அனுமானத்தின் பேரில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று நான் அனைவரையும் மனதாரக் கேட்டுக்கொள்கிறேன். அதிக பதிவுகளை கொண்டிருப்பதால் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் பழைய வீடியோ பதிவுகளை, நான் மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்றுதான்.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
‘RRR’ போன்ற பிரம்மாண்ட படத்தில், நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதை நினைத்து, எப்போதும் பெருமை கொள்கிறேன். சீதா கதாபாத்திரத்தில் விரும்பி நடித்தேன். ராஜமவுலி உடனும் தாரக் (ஜூனியர் என்.டி.ஆர்) மற்றும் ராம்சரண் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த விஷயம் குறித்து நான் விளக்கம் கொடுப்பதற்கு காரணம் என்னவெனில், ராஜமவுலியும் அவரது குழுவினரும், இந்த ஒரு அழகான திரைப்படத்தை உயிர்ப்பிக்க, பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளனர். அதனால் இப்படத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் வரும் தவறான தகவல்கள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் ராஜமவுலி மீது கோபத்தில் இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆலியா பட்.
இதையும் படியுங்கள்... RRR movie : ஆர்.ஆர்.ஆர் பெயரில் ‘காண்டம்’ விளம்பரம்... புரமோஷனுக்காக இப்படியா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்