ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி, 76 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Alia Bhatt Ex-Assistant Vedika Prakash Arrested : பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி, ஜூலை 8 ஆம் தேதி மாலை ஜூஹு போலீசாரால் கைது செய்யப்பட்டார். வேதிகா மீது பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வேதிகா ஆலியா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 76 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடியுள்ளார். வேதிகா மீதான புகார் பதிவு செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
ஆலியா பட்டிடம் 76 லட்சம் மோசடி
போலீசார் வெளியிட்ட தகவல்களின்படி, வேதிகா ஆலியாவின் போலியான கையொப்பத்தைப் பயன்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் பல லட்சம் ரூபாயை எடுத்ததாகக் கூறப்படுகிறது. 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எடர்னல் சன்ஷைன் நிறுவனத்தின் நிதியிலிருந்தும்; ஆலியாவின் தனிப்பட்ட கணக்குகளிலிருந்தும் 76 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வேதிகா பிரகாஷ் கைது
ஆலியாவின் தாயாரும், நடிகையுமான சோனி ராஸ்டன் ஆகியோர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி மீது கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அப்போதிருந்து விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று மும்பை போலீஸ் குழு ஒன்று வேதிகாவை பெங்களூருவில் கண்டுபிடித்து கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு விவரங்களையும் சேகரிக்க போலீசார் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், ஆலியாவோ அவரது குழுவோ இதுவரை இதுகுறித்து எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.
நடிகை ஆலியா பட் திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிலையில், தற்போது அவர் கைவசம் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் லவ் அண்ட் வார் என்கிற திரைப்படம் உள்ளது. இப்படத்தில் தன்னுடைய கணவர் ரன்பீர் கபூருடன் நடிக்கிறார் ஆலியா. இதில் மற்றொரு ஹீரோவாக விக்கி கெளஷல் நடித்து வருகிறார். இதுதவிர ஃபர்ஹான் அக்தர் இயக்கும் ஜீ லீ சாரா என்கிற திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார் ஆலியா. இப்படத்தில் ஆலியா உடன் கத்ரீனா கைஃப் மற்றும் பிரியங்கா சோப்ராவும் நடிக்க உள்ளார்களாம்.
