இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் 'தெறி' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைகோர்த்த திரைப்படம் 'மெர்சல்'. ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்த விஜய்க்கு இது மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

படத்தின் ரிலீசுக்கு பின், தேசிய கட்சியான பாஜகவின் நலத்திட்டங்களை கேலி செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. பின் குறிப்பிட்ட காட்சி இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் இப்படி எழுந்த சர்ச்சை இந்த படத்திற்கு இலவச ப்ரோமோஷனாக அமைந்தது என்று சிலர் விமர்சித்தனர்.

ஆனால் நல்ல படங்கள், எப்போதும் வெற்றி பெரும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில், நேரடியாக விமர்சனங்களுக்கு பதிலடி  கொடுத்தனர்.

2017 ஆம் ஆண்டு, வெளியான 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், 'ஆளப்போறன் தமிழன்' ஹை லைட் சாங் எனலாம். இதில் இடம்பெற்றிருந்த விவேக்கின் பாடல் வரிகளும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் வேற லெவல் என கூறும் அளவிற்கு ரசிகர்களை சென்றடைந்தது.

இந்நிலையில் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. ஒரு தமிழ் பாடல் 100 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளதை விஜய் ரசிகர்களும், படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர்.