தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்கிற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த சேனல் மூலம் அவர் தனது கார் ரேஸிங் தொடர்பான செய்திகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார் என கூறப்படுகிறது.
‘அஜித்குமார் ரேஸிங்’ அணி தொடக்கம்
நடிகராக மட்டுமல்லாமல் கார் பந்தய வீரராகவும் நடிகர் அஜித்குமார் விளங்கி வருகிறார். 2001-ம் ஆண்டு முதல் கார் ரேஸ்களில் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார். இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையும் சூடியுள்ளார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்கிற பெயரில் ஒரு பந்தய அணியையும் உருவாக்கி, இதன் மூலம் சர்வதேச அளவில் நடக்கும் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இளம் பந்தய வீரர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
வெற்றிகளை குவிக்கும் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி
2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் அவரது அணி துபாயில் நடைபெற்ற கார் பந்தயப் போட்டியில் பங்கெடுத்து மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. இத்தாலியில் நடைபெற்ற 12-வது ‘மிச்சலின் முகெல்லோ’ கார் பந்தயத்தில் பங்கேற்ற அஜித் குமாரின் அணி மூன்றாம் இடம் பிடித்தது. தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெற்று வரும் gt4 கார் பந்தயத்திலும் அஜித்குமாரின் அணி பங்கெடுத்துள்ளது.
அஜித்குமார் யூடியூப் சேனல்
இந்த நிலையில் அஜித்தின் கார் ரேஸிங் தொடர்பான செய்திகளை பகிர்வதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்கிற பெயரில் யூடியூப் சேனல் துவங்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தின் மூலமாக அஜித்குமார் பயிற்சி பெறும் வீடியோக்கள், அவர் பங்கேற்கும் கார் பந்தயங்கள் ஆகியவற்றின் விவரங்கள் பகிரப்படும் என கூறப்பட்டுள்ளது. சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் அவரின் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
