இன்று அஜீத்தின் அடுத்த படமான ‘தல 60’படத்துக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், இதே நாள் ‘பிகில்’பட நிர்வாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் பிறந்தநாளாகவும் அமைந்த நிலையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் யார் முதலிடம் பிடிப்பது என்பதற்காக அஜீத், விஜய் ரசிகர்கள் கடுமையான கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலைக்கூட என்றாவது ஒருநாள் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் போலிருக்கிறது. ஆனால் அஜீத்-விஜய் ரசிகர்கள் மோதல் என்றுமே முடிவுக்கு வருகிற பாடில்லை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் அடுத்து நடிக்கவிருக்கும் ‘தல60’படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்று நேற்றே தயாரிப்பாளர் போனிகபூர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஒட்டி நேற்று முதலே அஜீத் ரசிகர்கள் புதுப்புது டிசைன்களை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். அதில் உச்சக்கட்ட கொடுமையாக ‘பிகில்’பட ட்ரெயிலரையே அஜீத்தைக்கொண்டு எடிட் செய்து வெளியிட்டிருந்தனர்.

இன்னொரு பக்கம் இன்று ‘பிகில்’படத் தயாரிப்பாளரின் மகளும் அப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியின் பிறந்தநாள் ஆகும். நேற்று தீபாவளி ரிலீஸை உறுதி செய்து இவர் ட்விட் பண்ணிய நிமிடத்திலிருந்தே இவருக்கு சினிமா பிரபலங்களிடமிருந்தும் விஜய் ரசிகர்களிடமிருந்தும் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்த நிலையில் இவர்களும் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிக்க முயல நேற்று இரவு தொடங்கிய ட்விட்டர் யுத்தம் நேரம் ஆக ஆக சூடுபிடித்துக்கொண்டுள்ளது. இப்போதைக்கு அட்ச்சித் தூக்கி  முதலிடத்தில் இருப்பவர்கள் சாட்சாத் அஜீத் ரசிகர்கள்தான்.