’பேட்ட’, ‘விஸ்வாசம்’ பட கலெக்‌ஷன் விவகாரங்களில் தனது மேனேஜர் மற்றும் வலைதள  டீம் மூலம் வெற்றிகரமாக வீழ்த்தி பி.எஸ். வீரப்பா சிரிப்பை வீராப்பாக சிரித்துக்கொண்டிருக்கிறாராம் அஜீத். மீடியாவில் யானை பலம் கொண்ட சன் பிக்சர்ஸையும், அசுர பலம் கொண்ட ரஜினியையும் அடித்து வீழ்த்தியதில் அவருக்கு ஆரவார மகிழ்ச்சியாம்.

ஆனால் வரும் பிப்ரவரி 3ம் தேதியன்று மிகவும் தர்மசங்கடமான அவமானம் ஒன்றை அஜீத் சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது. வரும் பிப்ரவரி 2,3ம் தேதிகளில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டுவிழா எடுக்க தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரிந்துகட்டிக்கொண்டு வேலைசெய்து வருவது தெரிந்த செய்தி.

இந்த விழாவினை முன்னின்று நடத்த கமலும், ரஜினியும் சம்மதித்துள்ள நிலையில், அடுத்து விஜய், விக்ரம், சூர்யா உட்பட அனைத்து தமிழ்நடிகர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்திருக்கும் தயாரிப்பாளர் சங்கம் அஜீத்துக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லையாம்.

ஏனெனில் சொந்த நிகழ்ச்சி உட்பட எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத அஜீத் இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வந்துவிடவா போகிறார் என்று முக்கிய தயாரிப்பாளர்கள் அனைவருமே கருத்துத்தெரிவித்தார்களாம். அமிதாப் தொடங்கி,சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் வரை இந்தியாவின் அத்தனை உச்ச நட்சத்திரங்களும் கலந்துகொள்ளும் ஒரு ராஜவிழாவுக்கு வராமல் இருப்பது அஜீத்துக்கு பெருத்த அவமானத்தையே உண்டாக்கும்.