புதுமாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் மட்டுமே முடிந்த நிலையில் பிறக்கப்போகும் பிள்ளைக்குப் பெயர் வைத்த கதையாக அஜீத்தின் ‘தல60’படம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு முன்பே அப்படத்துக்கு ஒரு ட்ரெயிலர் தயார் செய்து வெளியிட்டிருக்கிறார் அஜீத் வெறியர் ஒருவர். அந்த வீடியோவை அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கப்போகும் அனிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது ‘தல 60’படம். நேர்கொண்டபார்வை’தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர் வினோத் என்கிற அதே கூட்டனியில் துவங்கும் இப்படத்திற்கு நட்சத்திர மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. முழு நீள ஆக்‌ஷன் படமாக தயாராகும் இப்படத்தில் அஜீத் ஒரு பைக் ரேஸராகவே நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் வெளிநாடுகளில் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் இப்படத்தின் ஃபேன் மேட் போஸ்டர்களை ரசிகர்கள் மனம்போன போக்கில் டிசைன் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நீங்கள்லாம் போஸ்டர்தான ரிலீஸ் பண்ணுவீங்க நான் ட்ரெயிலரையே ரிலீஸ் பண்ணிக்காட்டுறேன் பார் என்று ஒரு அஜீத் வெறியர் மிகவும் மெனக்கெட்டு 84 நொடிகள் ஓடக்கூடிய ஒரு ட்ரெயிலரையே வெளியிட்டிருக்கிறார். அந்த ட்ரெயிலரை அஜீத் பட செல்ல மகள் அனிகா சுரேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருப்பதுதான் ஹைலைட்.