சில வருடங்களாகவே சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் கலக்கி வந்த அஜீத் தனது அடுத்த படமான ‘தல 60’படத்துக்காக கருகரு முடியுடன் சிறிய சைஸிலான மீசையுடன் மிகவும் இளமையான கெட் அப்புக்கு மாறியிருக்கும் தோற்றம் கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் நேற்று இரவு முதலே ட்ரெண்டிங்கில் உள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’படத்தைத் தயாரித்த ஜீ ஸ்டுடியோ நிறுவனமும் போனி கபூரும் இணைந்து தயாரிக்கும் ‘தல 60’படத்தை மீண்டும் ஹெச்.வினோத்தே இயக்குகிறார். அஜீத் பைக் ரேஸராகவே நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் தனது உடல்பருமனைக் குறைத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றத்தில் இருப்பது போன்ற இளமையான அஜீத் சென்னை திரும்பினார். அவரது தோற்றத்தைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

வழக்கமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதைத் தவிர்க்கும் அஜீத் இம்முறை ரசிகர்களுடன் பொறுமையாக நின்று போஸ் கொடுத்ததோடு தானும் சில செல்ஃபிகள் எடுத்துக்கொண்டார். இத்தோற்றத்தில் அஜீத் காதல் கோட்டை காலத்து இளமையோடு இருப்பதாக கமெண்ட் அடிக்கும் அவரது ரசிகர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயுடன் அஜீத் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு அதே இளமையுடன் இன்றும் இருப்பதாகப் பூரிப்படைந்து வருகின்றனர்.

இப்படம் ரிலீஸாகிற வரை அஜீத்தின் இளமை குறித்த அவரது ரசிகர்களின் கொசுத்தொல்லைகளை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.