அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அப்படத்தின் வியாபாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழாக்கம் இது.நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 10ம் தேதி சனிக்கிழமையாக இருப்பதால் பத்து நாட்கள் முன்னதாக ஆகஸ்ட்1ம் தேதியே ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டது. அதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் அப்படத்தின் வியாபாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.அஜீத்தின் முந்தைய படம் விஸ்வாசம். அப்படம் பெரும் வசூலைப் பெற்ற படமாக இருக்கிறது. அதுவே நேர்கொண்டபார்வை பட வியாபாரத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.அந்தப்பட வசூலைக் கணக்கிட்டு இந்தப்படத்துக்கு விலை சொல்வதால் வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயங்குகின்றனராம்.

எடுத்துக்காட்டாக, திருச்சி பகுதியில் விஸ்வாசம் படம் நான்கரை கோடி எம்ஜி அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டதாம்.. அப்படம் அங்கு சுமார் ஏழரை கோடி வரை வசூல் செய்திருக்கிறது. அதைக்கணக்கிட்டு இப்படத்துக்கு விலை சொல்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். ‘விஸ்வாசம்’ அஜீத்தின் ஹீரோயிஸம், செண்டிமெண்ட் அவ்வளவும் கலந்த முழுமையான அஜீத் படம் .ஆனால் இந்தி பிங்க் படத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் ‘நேர்கொண்ட பார்வை’யில்  அஜீத் ஒரு மணி நேரம் மட்டுமே வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அவ்வளவு விலை கொடுத்தால் நிச்சயம் வசூலாகாது என்று நினைத்து விநியோகஸ்தர்கள் இப்படத்தை வாங்கத் தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.