நாளை அஜீத் தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாக தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்து அவர் அனுப்பிய அறிக்கை வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த எட்டு ஆண்டுகளில் அவர் மன்றத்தை மீண்டும் துவங்க இருப்பதாக, அரசியல் கட்சிகளில் தன்னை இணைத்துக்கொள்ள இருப்பதாக எத்தனையோ செய்திகள் வந்தபோதும் தனது முடிவில் சிறிதும் சலனமின்றி இரும்பு மனிதராகவே இருந்து காட்டியவர் அஜீத். அவர் மன்றத்தை மீண்டும் துவங்கவிருப்பதாக செய்திகள் வரும்போதெல்லாம் ‘மங்காத்தா’ படச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டுக் கடந்துவிடுவார் அவர். அந்த ச் சிரிப்புக்காக இதோ நாங்களும் தருகிறோம் ஒரு செய்தி. 2020ல் மீண்டும் ரசிகர் மன்றத்தைத் துவங்கி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் அஜீத். ஆனால் நாளை பிறந்த நாளன்று இந்த ரகசியச் செய்தியை கண்டிப்பாக வெளியிட மாட்டார் அஜீத்.

இதோ ஏப்ரல் 29, 2011 அன்று அஜீத் வெளியிட்ட ரசிகர் மன்றக் கலைப்புக் கடிதம்...

வணக்கம் பல,
’அமராவதி’ திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் ’மங்காத்தா’50-வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தாருக்கும் இந்த அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நீண்ட நாட்களாகவே என்னைச் சிந்திக்க வைத்த ஒரு கருத்தைச் சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். நான் என்றுமே ரசிகர்களை, எனது சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால், அதற்கு ஆதரவு தரவும்- சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. 

எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தைக் கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை, பார்க்கவும் மாட்டேன்.கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள், என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும்போதும் என்பதே என் கருத்து.

வரும் மே மாதம் 1 ஆம் தேதி எனது நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை என் முடிவாக அறிவிக்கிறேன். இன்றுமுதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன். மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில்கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவும் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவளிக்கும் என உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.

-அஜித்குமார்.