நமது இணையதளத்தில் கடந்த வாரம் வெளியிட்ட செய்தி ஒன்றை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று ஹைதராபாத் சென்று நடிகர் அஜீத்தை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இச்சந்திப்பு கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் போனிகபூருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அஜீத் நடிப்பில் இயக்குநர் ஹெச்.விநோத் இரண்டு படங்கள் இயக்குவதாக இருந்தது. அதன் முதல்படமான ‘பிங்க்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு அடுத்த படியாக விநோத்தின் சொந்தக் கதை ஒன்றில் நடிக்க சம்மதித்திருந்த அஜீத் சற்று பின்வாங்கி மீண்டும் ஒரு ரீமேக்கையே வினோத் இயக்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

இதற்கு ஒப்புக்கொள்ளாத வினோத் இரண்டாவது படத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் அப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று நாம் கடந்த வாரமே செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று அவரை ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் சந்தித்து அடுத்த படம் குறித்து உரையாடியிருக்கிறார்.

இந்த சர்ப்ரைஸான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்...அண்ட்....திஸ் ஹேப்பண்ட்...குட்நைட்’ என்று சுருக்கமாக பதிவு மட்டும் போட்ட வெங்கட் பிரபு அஜீத்தின் சால்ட் அண்ட் சால்ட் கெட் அப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.