'தல' அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவான படம் 'நேர்கொண்ட பார்வை'. 'பிங்க்' ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, வழக்கறிஞர் பரத் சுப்பிரமணியமாக அசத்திய அஜித்தின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

'நேர்கொண்ட பார்வை' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. புதிய படத்திற்கு 'வலிமை' என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, கடந்த அக்டோபர் மாதமே படத்திற்கான பூஜையையும் போட்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறியது. 

மேலும், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா உள்பட 'நேர்கொண்ட பார்வை' படத்தில் பணியாற்றிய அதே குழுவே, வலிமையிலும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.


அதற்கு ஏற்றாற்போல், நவம்பர் மாதம் டெல்லியில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

ஆனால், தற்போதுவரை படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அத்துடன், 'வலிமை' தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த தல ரசிகர்கள், சமூகவலைதளங்களில் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக கேள்வி மேல் கேள்வி கேட்டு படக்குழுவினரை நச்சரித்து வந்தனர்.

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக, தயாரிப்பாளர் போனி கபூர், 'வலிமை' படப்பிடிப்பு காலதாமதம் ஆவதற்கான விளக்கத்தை கூறியுள்ளார்.இந்த படத்தில் அஜித் வித்தியாசமாக, இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும்,  அந்த கேரக்டருக்காக தன்னை தயார் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள போனி கபூர், கேரக்டருக்காக அஜித் தன்னை தயார் செய்து கொண்டதும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் போனி கபூரிடமிருந்து வந்திருக்கும் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஒரு கேரக்டருக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள இத்தனை மாதங்கள் அஜித் காலம் எடுத்துக்கொள்கிறார் என்றால் அந்த கேரக்டர் ரசிகர்களை முழு திருப்திபடுத்தும் விதமாகதான் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.