விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர் பார்த்து காத்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள விஸ்வாசம் படம் சுமார் ஒன்றரை வருடத்துக்கு பின் வெளிவருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே அஜித் ரசிகர்கள் 200 அடியில் பேனர் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த பேனர் 20 அடி அகலம் கொண்டது என்றும் 200 அடி நீளம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே விஜய் நடித்த சர்கார்  படம் வெளியானபோது கேரளாவில் கொல்லம்  விஜய் ரசிகர்கள் 175 அடி கட்-அவுட் வைத்து திருவிழா போல கொண்டாடினர். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அஜித்தின் 200 அடி நீள பேனர் வைக்க உள்ளனர்.