விஸ்வாசம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயம், அதன் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் சோஷியல் மீடியாவில் அஜித்தின் ரசிகர்கள் வைத்த ஒரே கோரிக்கை...”தல கூட தொடர்ந்து நாலாவது படம். உங்களுக்கு இது பெருமை! ஆனால் விவேகம் தந்த சறுக்கல் மனசை சங்கடப்படுத்துது. விஸ்வாசத்தோட விலகிடுங்க, ஆனா போறப்ப பொறுப்பா ஒரு ஹிட்டை கொடுத்துட்டு போங்க.” என்பதுதான்.

சிவாவின் முகத்தில் அறைவது போல் இருந்தாலும் கூட ரசிகர்களின் வார்த்தைகளி இருந்த நிஜத்தை உணர்ந்து கொண்டார் அவர். விளைவு, முழு ஈடுபாடுடன் செதுக்கியதன் விளைவாக, ரஜினியின் பேட்ட படத்தையே டீலில் விட்டு அதிரிபுதிரி ஹிட்டடித்தது விஸ்வாசம். இந்த நிலையில், போனிகபூரின் தயாரிப்பில் ‘தீரன்’ விநோத் இயக்கத்தில் இந்தி ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமிட் ஆனார் அஜித். ஜோடியாக வித்யாபாலன். ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பட்டையை கிளப்பி வளர்ந்து கொண்டிருக்கிறது இந்தப் படம். 

இந்தப் படத்தில் அஜித்தின் கெட் - அப் பற்றி கூட நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்தப் படம் முடிந்ததும், அதே விநோத் இயக்கத்தில் தொடர்ந்து இரண்டாவது படம் செய்யும் முடிவில் இருந்தார் அஜித். போனி கேட்டுக் கொண்டதால் இந்தப் படத்தை ரீமேக் செய்ய சம்மதித்த விநோத், அடுத்து தனது சொந்த கதையில் அஜித்தை இயக்க ஆசைப்பட்டார். அதற்கு தல மற்றும் தயாரிப்பாளர் என இரு தரப்பும் ஓ.கே.

 

 இந்த நிலையில் இப்போது ஒரு புது பஞ்சாயத்து. அதாவது தல மற்றும் இயக்குநர் வினோத் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லையாம். ஒவ்வொரு காட்சி மேக்கிங்கிலும் அஜித்தின் அப்ரோச்மெண்ட் ஒரு கலரில் இருக்க, இயக்குநர் விநோத்தின் இயக்கமோ வேறு மாதிரி இருக்கிறதாம். இதனால் தொடர்ந்து இருவருக்குள்ளும் இடைவெளி, அது பெரிதாகிக் கொண்டும் போகிறதாம். பொதுவாக தல தனது இயக்குநர்களுடன் ஓவர் சிலாகிப்புடன் பழகுவார். இயக்குநருக்கு தான் இலகுவாகவும், தனக்கு இயக்குநர் இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பது தல யின் கணக்கு. அந்த வகையில் சிவாவை ரொம்ப பிடித்துப் போனதால்தான் தொடர்ந்து நான்கு படங்களை அவருடன் செய்தார். 

ஆனால் விநோத்துடன் தனக்கு பெரிதாய் செட் ஆகவில்லை என்பது அஜித்தின் எண்ணம். இயக்குநருக்கும் அதே எண்ணம். இதற்கு இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சொல்லிக் கொள்ளாமல் நாகரிகமாகதான் எட்டி நின்று வேலைகளை கவனிக்கின்றனர். ஆனால் இந்த இடைவெளியை தெளிவாக புரிந்து கொண்ட தயாரிப்பாளர் போனிகபூருக்குதான் மிக சிரமம். இயக்குநரான இளையவர் விநோத்தை உரிமையுடன் கண்டிக்கும் போனியால் தல-யை நெருங்கி எதையும் சொல்லமுடியவில்லை. சின்ன புன்னைகையுடன் டெய்லி ஷெட்யூலை கவனித்துக் கொண்டிருக்கிறார் போனி. 

 

இந்த சூழலில்தான் தல திடீரென ஒரு புதிய முடிவை எடுத்து, தனக்கு நெருக்கமான வட்டாரத்தினுள் அதை வலம் வர விட்டிருப்பதாக தகவல்கள் தடதடக்கின்றன. அதன்படி அஜித்தின் அடுத்த படம் விநோத்துடன் இல்லையாம். தனக்கு ஏற்கனவே பக்காவாக செட் ஆகியிருந்த பழைய இயக்குநர் கம் நண்பர்களிடமே போய்விடலாம் என நினைக்கிறாராம். அந்த லிஸ்டில் மங்காத்தா வெங்கட்பிரபு, பில்லா விஷ்ணுவர்தன் ஆகியோர் இருக்கின்றனர். இதைக் கேள்விப்பட்டு தல ரசிகர்களுக்கு தாறுமாறான கொண்டாட்டம். காரணம் இரண்டு படங்களுமே அஜித்துக்கு தாறுமாறான வெற்றிப்படங்கள். மங்காத்தாவில் அசுரத்தனமாக தெறிக்கவிட்டிருந்த தல, பில்லாவில் ஸ்டைலியாக அதகளம் பண்ணியிருப்பார். எனவே இந்த இரண்டு இயக்குநர்களுக்கும் அஜித்தை எப்படி சக்ஸஸ்ஃபுல்லாக ஹேண்டில் செய்வதென்பது விளங்கும். எனவேதான் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடினார்கள்.

 

ஆனால் இப்போது அஜித் தரப்பிலிருந்து கசிந்திருக்கும் கூடுதல் தகவல்தான் அவர்களை களேபரமாக கலவரப்பட வைத்துள்ளதாம். அது...தனது அடுத்த படத்தை பழைய நண்பர்கள் யாரிடம் கொடுக்கலாம்? என்று யோசித்த தல-யின் லிஸ்டில் சிறுத்தை சிவாவும் இணைக்கப்பட்டுள்ளராம் லேட்டஸ்டாக. ஆ! மீண்டும் சிவாவா? என்று பேஸ்தடித்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்தின் மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா ஆகியோருக்கு போன் மற்றும் இமெயில் மூலமாக ‘வேண்டாம் சிவா’ என்று குமுறிக் கொட்டுகிறார்களாம். ஆனால் அவர்களோ சிரித்தபடியே ...’விஸ்வாசம் வெற்றி அதுக்குள்ளே மறந்துடுச்சா? இன்னும் ஓடுதுப்பா அந்தப்படம்!’ என்கிறார்களாம். இஞ்சாருடா!