நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற  படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் விஸ்வாசம் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். இமான் இசையமைக்கும் முதல் அஜித் படம் இது. மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.

இந்தப்  படத்தையடுத்து சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய  படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை . மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த போது அதில் கெஸ்ட் ரோலில் அஜித் நடித்துக் கொடுத்தார். அப்போது தனது நிறுவன தயாரிப்பில் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி அஜித்திடம் கேட்டுக் கொண்டார். அதற்கு அஜித்தும் ஒத்துக் கொண்டதாக தெரிகிறது.

ஆனால் எதிர்பாராத விதமாக நடிகை ஸ்ரீதேவி மறைந்தார். ஆனாலும் தான் சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் போனி கபூர் நிறுவனத்துக்கு தற்போது கால்ஷீட் கொடுத்துள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படம்தான் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைக்க இருப்பது யுவன் சங்கர் ராஜா என்ற தகவல் கிடைத்துள்ளது.

அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். அஜித் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி என்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவரும் இணைந்தால் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு ‘விஸ்வாசம்’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.