பாலிவுட்டில் ஆக்‌ஷன் ஹீரோவான  அஜய் தேவ்கன் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான "தானாஜி" திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது. இதையடுத்து அஜய் தேவ்கன் கால்பந்து பயிற்சியாளர் சயத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி நடித்து வரும் 'மைதான்'  ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் ரிலீசான "கைதி", விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால், இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், சென்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால், ஸ்கோர் செய்து 'டில்லி' கார்த்தி கைதட்டல் வாங்கினார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தான் கைதி படத்தை இயக்கி இருந்தார். 

இதையும் படிங்க: சொட்ட, சொட்ட நனைந்து... உச்சகட்ட கவர்ச்சி காட்டும் ஷாலு ஷம்மு... வசைபாடும் நெட்டிசன்கள்...!

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் அதில் ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடிக்க உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  'தமிழில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடிக்கிறேன். இப்படம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "மயக்க மருத்து கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார்கள்"... பிரபல பாடகியின் பகீர் இன்ஸ்டாகிராம் பதிவு...!

இப்படத்தை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்டும் டிரீம் வாரியர்ஸூம் இணைந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது. படத்தின் இயக்குநர், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கு முன்னதாக அஜய்தேவ்கன், தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.