‘எல்லாப் படங்களிலும் ஹீரோயின் வேடம்தான் முதன்மைக் கதாபாத்திரமாக இருக்கவேண்டியதென்பது அவசியமில்லை. சிவகார்த்திகேயன் படத்தில் தங்கை வேடத்தில் நடித்தாலும் கூட அப்படத்தின் நாயகி நான் தான்’ என்று சற்று காட்டமாகவே கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் ஐஸ்வர்யா நடிப்பில் நல்ல ஹிட்டடித்த ‘கனா’ படம் இவரது நடிப்பிலேயே தெலுங்கில் ’கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதன் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியான நிலையில் ஹைதராபாத்தில் நிருபர்கள் மத்தியியில் பேசிய ஐஸ்வர்யா,”தமிழில் அதிக கமர்ஷியல் படங்களில் வாய்ப்பு கிடைக்காதது பற்றி எப்போதுமே எனக்குப் பெரிய வருத்தமில்லை.

கமர்ஷியல் டைரக்டர்களின் கதாநாயகிகள் பட்டியலில் நான் மூன்றாவது நான்காவது இடத்தில்தான் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். இரண்டு பாடல்கள், நான்கு காதல் காட்சிகள் மட்டும் இருக்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பமும் இல்லை.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படத்தில் தங்கை கேரக்டரில் நடிப்பதை பலர் கவுரவக்குறைவாகவும் எனக்கு மார்க்கெட் இறங்கிவிட்டதாகவும் பார்க்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிப்பதால் படத்தின் ஹீரோயின் அவர்தான் என்று ஆகிவிடுமா? எல்லாப்படத்திலும் ஹீரோயின் தான் முதன்மைப் பாத்திரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அப்படிப்பார்த்தால் அந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் என்னுடையதுதான்’ என்கிறார் ஐஸ் ஹாட்டாக.