ஜி.எஸ்.டி-க்கு அப்புறம் தமிழகத்தில் திரையரங்குகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ள என்று தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியது:

“நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜி.எஸ்.டி, கடந்த ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி ரூ.100-க்கு குறைவான சினிமா டிக்கெட்களின் விலை 18% உயர்கிறது. அதேபோல் ரூ.100-க்கு மேலான சினிமா டிக்கெட்களின் விலை 28% உயர்கிறது.

இதனால் டிக்கெட்களின் விலை ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளதன் காரணமாக மக்களின் வருகை தியேட்டர்களில் குறைந்துள்ளது.

இது ஒன்று மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. துணிமணிகள், உணவு, பயணம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளதால், மக்களால் சமாளிக்க முடியவில்லை. இதுவும் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறைய காரணமாக அமைந்துள்ளது.

நகர்ப்புறங்களில் உள்ள பிரபல தியேட்டர்களில் 30% முதல் 40% வரை வருகை குறைந்துள்ளது. இருப்பினும் தற்போதைய மக்கள் வருகையை வைத்து, ஜி.எஸ்.டி விளைவை மதிப்பிட முடியாது. வரும் வாரங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரவுள்ளதால், அதைக் கொண்டு மட்டுமே உண்மையான ஜி.எஸ்.டி விளைவை அறிய முடியும்” என்று தமிழ்நாடு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.