அருண் விஜய்யின் ஆக்ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? ‘ரெட்ட தல’ விமர்சனம்
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெட்ட தல திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Retta Thala Movie Review
அருண் விஜய் டூயல் ரோலில் நடித்துள்ள ஆக்ஷன்–திரில்லர் திரைப்படம் ‘ரெட்ட தல’. தடம் (2019) படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு, அருண் விஜய் நடித்த சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வணங்கான் மற்றும் மிஷன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதன்பின் தனுஷ் உடன் அவர் நடித்த இட்லி கடை திரைப்படம் அருண் விஜய்க்கு ஓரளவு இமேஜ் மாற்றத்தை கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லருடன் அவர் ரசிகர்களை சந்திக்கிறார் – அதுதான் ரெட்ட தல.
ரெட்ட தல விமர்சனம்
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், அருண் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். சித்தி இத்னானி மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள பின்னணி இசை, படத்தின் வேகத்தையும் டென்ஷனையும் அதிகரிக்கிறது.
“ஆசையே தீய எண்ணங்களின் தொடக்கம்” என்ற புத்தரின் வாக்கியமே ரெட்ட தல படத்தின் அடிநாதமாக அமைந்துள்ளது. அதிகாரம், பகைமை, பேராசை ஆகியவை ஒரு மனிதனை எந்த அளவிற்கு மாற்றி விடும் என்பதை வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். படம் தொடங்கும் முதல் சில நிமிடங்களிலேயே ஒரு முக்கியமான கேள்வி முன்வைக்கப்படுகிறது. அந்த கேள்விக்கான விடைதான், கடைசி வரை கதையை இழுத்துச் செல்லும் முக்கிய துருப்புச்சீட்டாக செயல்படுகிறது.
ரெட்ட தல படம் எப்படி இருக்கு?
ஒன்றன் பின் ஒன்றாக வரும் எதிர்பாராத திருப்பங்கள், நுணுக்கமான தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட சேஸிங் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் ஆகியவை படத்தின் முக்கிய பலங்களாகத் தெரிகின்றன. இரட்டை வேடங்களுக்கிடையிலான மனநிலை, உடல் மொழி, பார்வை மாற்றங்களை அருண் விஜய் தனது நடிப்பில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். கதையின் பார்வை சித்தி இத்னானியின் கதாபாத்திரத்தின் வழியாக நகர்வதால், அவருக்கும் படத்தில் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் வேகமாக நகரும் திரைக்கதையில், நின்று யோசிக்கவோ அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படவோ நேரமில்லை. இயக்குநர் உருவாக்கிய ஒரு தனித்துவமான உலகுக்குள் பார்வையாளரை இழுத்துச் சென்று, அதனை அனுபவிக்க வைக்கிறது ரெட்ட தல. தீவிரமான ஆக்ஷன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு, இந்த படம் ஒரு நல்ல கிறிஸ்துமஸ் ட்ரீட் என்று சொல்லலாம்.
சுதாரிப்பாரா அருண் விஜய்?
கோலிவுட்டின் முன்னணி ஆக்ஷன் நடிகர்களில் அருண் விஜய் முக்கிய இடம் பிடித்தவர். தடையறத் தாக்க, என்னை அறிந்தால், செக்கச் சிவந்த வானம், தடம் போன்ற படங்களில் அவரது ஆக்ஷன் திறனும், உடல் மொழியும் பாராட்டுகளை பெற்றுள்ளன. அதே நேரத்தில் பாண்டவர் பூமி, இயற்கை போன்ற படங்களில் அவரது நடிப்பு வேறு ஒரு பரிமாணத்தை எட்டியது என்பதும் உண்மை.
ஆனால் சமீப காலமாக, தொடர்ந்து ஒரே மாதிரியான ஆக்ஷன் மையக் கதைகளைத் தேர்வு செய்து வருவது ரசிகர்களிடையே ஒரு விதமான சோர்வை ஏற்படுத்தியுள்ளது. அருண் விஜயை ஒரே ஒரு இமேஜுக்குள் மட்டும் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை என்பதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.

