அதிக எடையுடன் இருந்த பாடகர் அட்னான் சாமி, தான் 120 கிலோ உடல் எடையை 6 மாதத்தில் குறைத்துள்ளதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Singer Adnan Sami Weight Loss Journey : உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் தான் பாடகர் அட்னான் சாமி. ஒரு காலத்தில் இளைஞர்களிடையே அவரது பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. காதல், பிரிவு, சோகம், மகிழ்ச்சி என எந்த மனநிலையிலும் அவரது குரலில் பாடல்களைக் கேட்பது ஒரு தனி அனுபவம் என்று அனைவரும் கூறுவார்கள். அப்போதெல்லாம் அவர் பாடிய மற்றும் நடித்த பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. இன்றும் அந்தப் புகழுக்குக் குறைவில்லை.
அதிக எடையுடன் இருந்த அட்னான் சாமி, பலமுறை உடல் பருமனுக்காக விமர்சிக்கப்பட்டார். 230 கிலோ உடல் எடையுடன் இருந்த அவர் எப்படி எடையை குறைத்தார் என்பதை அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 'ஆப் கி அதாலத்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் இதைப் பற்றி அவர் பேசி உள்ளார். 2006 ஆம் ஆண்டில் தனது எடையைக் குறைக்கத் தயாரானதாகவும், அப்போது தனது தந்தைக்கு கணைய புற்றுநோய் இருந்ததாகவும் அட்னான் சாமி நினைவு கூர்ந்தார்.

அட்னான் சாமி உடல் எடையை எப்படி குறைத்தார்?
'ஒருமுறை அவர் என்னை லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உங்கள் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் எல்லைக் கோட்டில் உள்ளன. இந்த வாழ்க்கை முறையைத் தொடர்ந்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு உங்கள் பெற்றோர் ஒரு ஹோட்டல் அறையில் உங்களை இறந்த நிலையில் காண்பார்கள்' என்று மருத்துவர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மருத்துவரின் அந்த வார்த்தைகள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"அன்று மாலை நேராக ஒரு பேக்கரிக்குச் சென்றேன். பேஸ்ட்ரி உள்ளிட்டவற்றை வாங்கினேன். அப்பாவுக்கு கோபம் வந்தது. அழுகையும் வந்தது. அன்று இரவு அப்பா, 'மகனே.. என்னை உன் உடலைக் கல்லறையில் வைக்க வைத்துவிடாதே. நீதான் என் உடலைக் கல்லறையில் வைக்க வேண்டும்' என்று அழுதுகொண்டே கூறினார். அந்தக் கணத்தில் இருந்து எடையைக் குறைக்க முடிவு செய்தேன். ஆறு மாதங்களில் 120 கிலோ குறைத்தேன். எந்த அறுவை சிகிச்சையும் நான் செய்யவில்லை. அதற்குப் பதிலாக ஊட்டச்சத்து நிபுணர் எனக்காக உணவுப் பட்டியலைத் தயாரித்துக் கொடுத்தார். நான் எடையைக் குறைக்கத் தொடங்கினேன். சர்க்கரை, மது, அரிசி, ரொட்டி, எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்த்தேன்", என்று அட்னான் சாமி கூறினார்.
அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் இயற்கையான முறையில் உடல் எடையை குறைத்ததாக கூறுவதை பலரும் மறுக்கிறார்கள். 6 மாதத்தில் 120 கிலோ எடையை குறைக்க வாய்ப்பே இல்லை என்றும், அவர் வேறு எதாவது சிகிச்சை எடுத்தோ அல்லது மருந்துகளை உட்கொண்டோ குறைத்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.
