பலரும் உடல் எடையை குறைப்பதற்கு போராடி வருகின்றனர். ஜிம்மில் தீவிர பயிற்சி செய்தும், டயட் உணவுகளை உட்கொண்ட பிறகும் பலருக்கும் எடை குறைவதில்லை. அவர்களுக்கான ஒரு சூப்பரான கஞ்சி ரெசிபி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொள்ளு பார்லி கஞ்சி:
கொள்ளு மற்றும் பார்லி சேர்த்து செய்யப்படும் இந்த கஞ்சியை தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரைந்து எடை வேகமாக குறையத் துவங்கும். தினமும் காலை உணவாகக் கூட இந்த கஞ்சியை குடித்து வரலாம். கொள்ளு மற்றும் பார்லி இரண்டும் உடலை வலுவாக்குவதோடு, ஆரோக்கியமான வகையில் எடை குறைப்புக்கு வழி வகுக்கின்றன.
தேவையான பொருட்கள்:
- கொள்ளு - அரை கப்
- பார்லி அரிசி - அரை கப்
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - ஐந்து பல்
- வெங்காயம் - 1
- கேரட் - 1
- பீன்ஸ் - 1
- வெண்ணெய் - அரை ஸ்பூன்
- தண்ணீர் - 2 டம்ளர்
- உப்பு - தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சேர்க்காமல், வெறும் கடாயில் கொள்ளு மற்றும் பார்லியை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் மிளகு சீரகத்தையும் வாசம் வரும் வரை வறுத்து, அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் வெண்ணெய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டை வாசம் போகும் வரை வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வெந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன் பொடித்து வைத்திருக்கும் கொள்ளு, பார்லி அரிசி, மிளகு, சீரக கலவையை அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.
பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி கறிவேப்பிலை கொத்தமல்லி இலை தூவி சாப்பிட்டால் சுவையான கொள்ளு பார்லி கஞ்சி தயார். இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் குடித்து வந்தால் உடல் எடை கணிசமாக குறைந்து இருப்பதை நீங்களே கண்கூடாக பார்க்க முடியும்.
