சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக களம் இறங்கும் ‘ஆதித்ய வர்மா’படத்தின் ட்ரெயிலர் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. ‘என்னால் எவ்வளவு சிறப்பாக நடிக்க முடியுமோ அவ்வளவு நடித்திருக்கிறேன். ஆனால் அப்பாவோடு ஒப்பிட்டுக்கொண்டு படம் பார்க்க வேண்டாம்’என்று தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் துருவ்.

சுமார் ஒரு வருடத்துக்கும் முன்பே பாலாவின் இயக்கத்தில் துவக்கப்பட்ட ‘வர்மா’தயாரிப்பாளருக்குப் பிடிக்காததால் கிடப்பில் போடப்பட்டு பின்னர் ‘ஆதித்ய வர்மா’வாக மறு அவதாரம் எடுத்துள்ளது. இப்படத்தை தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’படத்தின் இணை இயக்குநர் கிரிசாயா இயக்கியுள்ளார். ஜூன் மாதமே ரிலீஸாகியிருக்கவேண்டிய இப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஒரு வழியாக நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது.

‘அப்பா அளவுக்கு நடிப்பை எதிர்பார்க்கவேண்டாம் என்று தன்னடக்கமாக துருவ் கூறியிருந்தாலும் பட ட்ரெயிலரைப் பார்க்கும்போது மிகத் தேர்ந்த ஒரு நடிப்பை துருவ் வழங்கியிருப்பது தெரிகிறது. குடி மற்றும் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையான ஒரு டாக்டர் பாத்திரத்தில் ஒரிஜினல் தெலுங்கு ஹீரோவான விஜய் தேவரகொண்டாவை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நடித்திருக்கிறார் துருவ் என்று சொல்லும்படி இருக்கிறது அந்த ட்ரெயிலர். இப்பட ரிலீஸ் வரை தனது மகனுக்கு புதுப்படங்கள் எதுவும் கமிட் பண்ணாமல் காத்திருக்கிறார் விக்ரம். அந்த அளவுக்கு நம்பிக்கை.