நடிகர் விக்ரமின் மகன் துருவ் 'ஆதித்ய வர்மா' என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படம் தெலுங்கில், நடிகர் விஜய்தேவாரக்கொண்டா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் ஆக உருவாகி உள்ளது.

ஏற்கனவே, இந்த படத்தை, நடிகர் விக்ரமின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்கிய நிலையில், படம் எதிர்பார்த்தது போல் வரவில்லை என, தயாரிப்பு நிறுவனம் நிராகரித்தது. மேலும் இந்த படத்தை மற்றொரு இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி தற்போது இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில் இப்படம் மீண்டும் உருவாகியுள்ளது.  இதில் நடிகை  பனிதா சந்து, பிரியா ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஈ4 எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள,  இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தை நவம்பர் 8-ந்தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.