சில வாரங்களுக்கு முன் பரபரப்பான தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற ‘கரகாட்டக்காரன் 2’ படம் தொடர்பான செய்திகளுக்கு மிக ஸ்ட்ராங்கான ஒரு முற்றும் போட்டு முடித்துவைத்திருக்கிறார் முன்னாள் வெள்ளி விழா நாயகன் ராமராஜன்.

‘89ம் ஆண்டு ரிலீஸாகி ஒருவருடத்துக்கும் மேல் ஓடி சாதனை படைத்த கங்கை அமரன்,இளையராஜா, ராமராஜன்,கவுண்டமணி,செந்தில் கூட்டணியின் கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான ஸ்கிரிப்ட் வேலைகலில் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்றும் இயக்குநர் கங்கை அமரன் கூறியிருந்தார்.

அப்படத்தில் கரகாட்டக்காரன் படத்தில் முன்பு நடித்த அத்தனை கலைஞர்களுடன் புதுமுகங்களும் நடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கங்கை அமரன் தெரிவித்திருந்தார். ஆனால் சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருக்கும் ராமராஜன் ‘கரகாட்டக்காரன் 2’வில் நடிக்க கொஞ்சமும் ஆர்வமின்றி இருக்கிறார் என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்நிலையில் அச்செய்தியை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பேட்டி அளித்துள்ள நடிகர் ராமராஜன்,’கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் எடுப்பது அண்ணன் கங்கை அமரன் உட்பட பலபேர் என்னிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு நான் அமர் அண்ணனிடம் எனக்கு விருப்பம் இல்லை. அந்தப் படம் நடக்காது என்றே சொல்லிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை ஒரு தடவை கரகம் எடுத்தாச்சு,...வச்சாச்சு,, ஆடியாச்சி, கடைசியா அதை விட்டு ஓடியாச்சி அவ்வளவுதான்.  இன்னொரு தடவை அந்தப்படத்துல கைவைக்கிறதுங்குறது தேன்கூட்டுல கைவைவைக்குறது மாதிரிதான்’ என்று திட்டவட்டமாய் மறுக்கிறார் ராமராஜன்.