தேர்தல் பிரச்சாரங்களில் டி.டி.வி. யை மற்ற அனைவரையும் விட அதிகமாக விமர்சித்து வரும் அ.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா ’தினகரன் என்பவர் அ.தி.மு.க.வின் முதுகில் குத்திய கட்டப்பா’ என்றார்.

தேர்தல் களம் இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியநாதன்,திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பேசினார்.

அப்போது பேசிய அவர்,  ”ஜெயலலிதா இல்லையென்றால் எம்.ஜி.ஆரின் புகழ்  எப்போதோ மறைக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதாவுடன் விசுவாசமாக இருந்தவர்களான ஓ.பி. எஸ்.சும், இ.பி.எஸ்.சும்தான் இப்போது முதல்வர்களாக இருக்கின்றனர். ஊழலின் மொத்த உருவமே திமுக தான். நீர், நிலம், காற்று என பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சிதான் திமுக. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது திமுக. ஜல்லிகட்டுக்கு தடை விதித்து திமுக. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. தமிழகத்துக்கு மதுவை கொண்டு வந்தது திமுக. உலகத்திலே அதிகமாக பொய் பேசியது டி.டி.வி. தினகரன். அவர் அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா’என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், எம்.எல்.ஏ பலராமன் உட்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.