80 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி.

பல முன்னணி நடிகைகள், குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த போது, அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார், ஆக்ஷன் நாயகி என ரசிகளால் அதிரடி நாயகியாக அறியப்பட்டவர் விஜயசாந்தி. இவர் நடிக்கும் படங்களுக்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் உள்ளது.

திரையுலகை விட்டு விலகியதும், அரசியலில் குதித்தார் விஜயசாந்தி. ஆந்திரா மாநிலம் ஒருங்கிணைந்து இருந்தபோது விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்தார். அக்கட்சி சார்பில் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மெதக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

அதன்பின் தனித் தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மெதக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு விஜயசாந்தி தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். கட்சி கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் விஜயசாந்தி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்து, தமிழக அரசியலுக்கு போக மாட்டேன். ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கடந்த ஆண்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் மகேஷ் பாபு நடித்த, சரிலேறு நீகேவ்வாறு' என்கிற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'பிக்பிரதர்' என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் 50 வயதை கடந்தும் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த தமிழக முதலமைச்சர் எப்படி குழந்தைகள், குடும்பம் என எதுவும் இன்றி, அரசியல் பணிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றினாரோ அவரை போலவே, அரசியல் பணிகளை தானும் மேற்கொள்ள நினைத்ததாகவும், அதன் காரணமாகவே தான் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தன்னுடைய கணவரிடம் கேட்டபோது அவரும் ஒப்புதல் கொடுத்ததாக நடிகையும், அரசியல் பிரபலமுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை பெற்று கொண்டால் தன்னையும் மீறி சுயநலம் வந்துவிடும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்தாராம்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, போலவே மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பது தான் தன்னுடைய நோக்கம் என்றும், அவரை பார்த்து தான் நானும் குழந்தை வேண்டாம் என்கிற முடிவை உறுதியோடு எடுத்ததாக தெரிவித்துள்ளார் விஜயசாந்தி. மேலும் அரசியல் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும், தனக்கு பிடித்த கதை அமைத்தால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.