போதை பொருள் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் தனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்

கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ஆம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் இலங்கை தமிழர்கள் 10 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14ஆவது நபராக ஆதிலிங்கம் என்பவரை கைது செய்து அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சென்னை சேலையூரில் அண்மையில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு அரசியல், சினிமா தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குணசேகரன் என்பவருக்கு ஆதிலிங்கம் பினாமியாக இருந்து, போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை அரசியல், சினிமா, கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இவர் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணை வளையத்துக்குள் நடிகை வரலட்சுமி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. வெளிமாநிலத்தில் இருப்பதால் தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும், ஷூட்டிங் முடிந்ததும் விசாரணைக்கு ஆஜராவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஜி20 கூட்டம்: ஜோ பைடன், ஜி ஜின்பிங் தங்கும் சொகுசு ஹோட்டல்கள்!

இந்த நிலையில், தனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். தன்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் 5 ஆண்டுகளுக்கு முன்பே நின்று விட்டார் என தெரிவித்துள்ள வரலட்சுமி, தனது தாயாரிடம் மட்டுமே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், விசாரணைக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் வெளிமாநிலத்தில் இல்லை எனவும், சென்னையில்தான் இருக்கிறேன் எனவும், இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.