பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை வனிதா வெளியேற்றப்பட்டுள்ளதால் அங்கு பெரும் புயலடித்து ஓய்ந்த எஃபெக்ட் உருவாகியுள்ளதாக பார்வையாளர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தியதே அவர்தான். அவர் இன்னும் இருவாரத்துக்கு உள்ளே இருந்திருக்கவேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

வைல்ட் கார்டு எண்ட்ரியில் திரும்பவும் பிக்பாஸ் இல்லத்துக்குள் வந்த நடிகை அதிரடி காட்டினார். பின்னர் நேற்றைய எவிக்‌ஷனில் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, தற்போது சேரன், கவின், லொஸ்லியா, தர்ஷன், ஷெரின் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இப்போதைய நிலவரப்படி சேரன், தர்ஷன்,முகேன் ஆகியோரில் ஒருவரே டைட்டிலை வெல்லச் சாத்தியம் என்று சொல்லப்படுகிறது. இதில் சேரன் டாப்பில் நிற்கிறார்.

 இதற்கிடையே, தொடர்ந்து கவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சேரனின், செயல் வரவேற்க தக்கது என்பதை லொஸ்லியாவின் தந்தை நிரூபித்திருப்பதால் சேரனுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவரை கிண்டல் செய்தவர்களுக்கு, “இதுதான் உண்மையான தந்தை பாசம் மற்றும் அக்கறை” என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் சிலர் சேரன் வெற்றி பெறுவதற்காகவே இப்படி அப்பா நாடகம் போடுகிறார், என்று இன்னமும் குற்றம் சாட்டி வருகிறார்கள். லாஸ்லியாவிடம் அவர் காட்டும் உடல் ரீதியான நெருக்கம் மிக கொச்சையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேரன் கவின் காதலை எதிர்ப்பதற்கு காரணம் என்ன?, அவரது உண்மை முகம் எது, என்பது குறித்து பிரபல நடிகர் ஆரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.இது குறித்து திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஆரி, “லொஸ்லியா மற்றும் கவின் காதல் பற்றி தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. அதிலும் கவின் காதலுக்கு சேரன் குறுக்கே நிற்கிறார். அவருக்கு கவினையும் பிடிக்கவில்லை, காதலையும் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். மேலும், சேரன் தனது மகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர், அதனால் தான் பிக் பாஸ் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், என்று சொல்கிறார்கள்.

 உண்மையில் அப்படி இல்லை, சேரன் சார் காதலுக்கு எதிரானவர் அல்ல. அவருடன் நான் பணியாற்றியிருக்கிறேன். அதனால் அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் கவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ”எதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தோமோ அதை முதலில் பாருங்கள், பிறகு வெளியே சென்று நீங்கள் விரும்பியதை செய்யுங்கள், இது ஒரு விளையாட்டு, அதை விளையாட்டாகவே பாருங்கள்” என்று தான் சொல்கிறார். காதலை அவர் எதிர்க்கவில்லை. அதற்கான இடம் இதுவல்ல என்று தான் கூறுகிறார். எனவே சேரன் சாரை பற்றி இனி யாரும் தவறாக பேசாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.