பிரபல நடிகையும், இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, இந்த ஊரடங்கு நேரத்தில், ஒரு படத்தை நடித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் இயக்கத்தில், இவருடைய சகோதரி அனுஹாசன் நடிப்பில் கடந்த 1995 ஆம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'இந்திரா ' . இந்த படத்தை தொடர்ந்து படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல், தன்னுடைய மனதிற்கு பிடித்த கதைகள் அமைந்தால் அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கிட்ட தட்ட 25 வருடங்களுக்கு பின்,  மீண்டும் அவர் இயக்குனர் துறையில் காலடி வைத்துள்ளார். ஆனால் இந்த முறை, வெள்ளித்திரை படத்தை இயக்காமல், குறும்படம் ஒன்றை இயக்குகிறார்.  ’சின்னஞ்சிறு கிளியே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை  சுஹாசினி உருவாக்கியுள்ளார்.

இந்த குறும்படத்தில் அஹானா கிருஷ்ணா, சுகாசினி மணிரத்தினம், கோமளம் சாருஹாசன், மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நடித்து உள்ளதாகவும் இந்த குறும்படம் முழுவதுமே தனது ஐபோனில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். இந்த குறும்படத்திற்காக லைட்டிங் உள்பட எந்த வித டெக்னீசியனும் பணியாற்றவில்லை என்பது கூடுதல் தகவல்.

மேலும் இந்த குறும்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளதாகவும் கெவின் தாஸ் படத்தொகுப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20 நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த குறும்படம் விரைவில் வெளியாக இருப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சுகாசினி தெரிவித்துள்ளார். இவரின் இந்த படைப்பை பார்க்க இப்போதே ஆவலாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.