புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, அது திட்டமிட்ட கொலை தான் என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது பாலிவுட் மற்றும் கோலிவுட் வட்டாரத்தை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் விளங்கிய டாக்டர் உமாநாத் கடந்த புதனன்று உயிரிழந்தார். இந்நிலையில் அவருடனான தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட டிஜிபி ரிஷ்ராஜ் சிங்,’ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அறிந்து கொள்ள அவரிடம் நான் கேட்டபோது, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் தடயங்களும் அவரது மரணம் ஒரு விபத்து அல்ல என்பதை தெரிவிப்பதாகக் கூறினார்.கேரளாவில் பல்வேறு வழக்குகளில் டாக்டர் உமாநாத்தின் தடயவியல் நிபுணத்துவம் காரணமாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து டாக்டர் உமாநாத் கூறியது என்னவென்றால், நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும், வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் நடிகை மூழ்கி உயிரிழந்திரக்க முடியாது என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார்.தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் ஸ்ரீதேவியின் மரணம் மர்ம மரணமாகவே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் டிஜிபி.

2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் தான் தங்கியிருந்த ஓட்டல் பாத்ரூம் டப்பில் இறந்துகிடந்தார் ஸ்ரீதேவி. அவரது மரணம் குறித்த சந்தேகங்கள் இறந்த சமயத்திலேயே எழுப்பப்பட்ட போதும் தக்க பதில்கள் இன்றி மூடி மறைக்கப்பட்டன.