நடிகையும், ஆந்திர மாநில நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா வீட்டில் இருந்தபடியே, ஒர்க்அவுட் செய்யும் வீடியோவும், ஒரு நிமிட சவால் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா.  மேலும் தற்போது ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். அதோடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவியாகவும் செயல்பட்டு வருகிறார்.

மேலும் தன்  பகுதி மக்கள், ஊரடங்கு நேரத்தில் அவதிப்பட கூடாது என்பதற்காக தினமும் உணவு, கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக, கிருமி நாசினி போன்றவற்றை இவரே களத்தில்  இறங்கி அடித்தார். இவரின் இந்த செயல்களுக்கு ஒரு பக்கம் ஆதரவு கிடைத்தாலும், மற்றொரு புறம், தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக இப்படி செய்கிறார் என்கிற கண்டனங்களும் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய பகுதியில் குடிநீர் குழாய் ஒன்றை ரோஜா திறந்து வைத்தார்.  மேலும்  கட்சியினரின் ஏற்பாட்டின்படி ரோஜா காரில் வந்து இறங்கி நடந்து வரும் வழி நெடுக்க, ஒரு புறம் ஆண்கள் மற்றொரு புறம் பெண்கள் நின்று கொண்டு பூக்களை வாரி இறைத்தனர். இதனை ஏற்று கொண்டு நடிகை ரோஜாவும் அன்னநடை போட்டு வந்து, மாலை மரியாதையை ஏற்று கொண்டு, தண்ணீர் குழாயை திறந்து வைத்தார்.

இந்த வீடியோ வெளியாக, பலரும் தொடந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், ரோஜா உட்பட நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சைக்கு பின், தற்போது ரோஜாவின் பிட்னெஸ் வீடியோ வைரலாகி வருகிறது. 47 வயதிலும், இவர் செய்து அசத்தியுள்ள இந்த வீடியோவிற்கு பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.