மூன்று முறை தேசிய விருதுபெற்ற நடிகை ஊர்வசி சாரதாவுக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பள பாக்கியை செட்டில் செய்து அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார் பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவர். 

தற்போது 74 வயதாகும் பழம்பெரும் நடிகை ஊர்வசி சாரதா. 1959ல் நடிக்கத்துவங்கிய  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்தவர். தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை 3 முறை, இரு மலையாளப்படங்களுக்காகவும் ஒரு தெலுங்குப்படத்துக்காகவும்  வென்ற ஒரே நடிகை இவர்தான். பிரபலமாக விளங்கிய இவரை வைத்து 1979-ம் ஆண்டு, புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை கேரள மாநிலம், ஆலுவாவை சேர்ந்த தயாரிப்பாளர் வி.வி. ஆண்டனி எடுத்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது அவர், நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசியபடி சம்பளபாக்கியை அவர் செட்டில் செய்யவில்லை.

தொடர்ந்து வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள், வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை அவர் தர முடியாமலேயே போய்விட்டது. காலங்கள் உருண்டோடின. 40 ஆண்டுகள் கடந்து விட்டன. தனக்கு பட தயாரிப்பாளர் ஆண்டனி சம்பள பாக்கி தர வேண்டியதை நடிகை ஊர்வசி சாரதா மறந்தே போய்விட்டார். ஆனால் ஆண்டனி மறக்கவில்லை. இதற்கு இடையே பிள்ளைகளால் ஆண்டனியின் பொருளாதார நிலை உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அவர் நடிகை ஊர்வசி சாரதா வீட்டுக்கு சென்று, அவரை சந்தித்து சம்பள பாக்கியை கொடுத்துவிட விரும்பினார். இந்த நிலையில் நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக ஆண்டனிக்கு தெரிய வந்தது. அவருக்கு தர வேண்டிய பணத்தை விட கூடுதலான ஒரு தொகையை கவரில் போட்டு எடுத்துக்கொண்டு கொச்சி விழாவுக்கு ஆண்டனி சென்றார்.

விழாவுக்கு இடையே அவர் நடிகை ஊர்வசி சாரதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் தான் எடுத்து வந்திருந்த பண கவரை அவரிடம் தந்தார். 40 ஆண்டுகள் ஆன போதும், கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை மறக்காமல் திருப்பி தந்ததில், அவர் காட்டிய நேர்மை, நடிகை ஊர்வசி சாரதாவுக்கு வியப்பை தந்தது. அவர் நெகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றனர்.

நடிகைகளின் சம்பள பாக்கியை செக்காக கொடுத்துவிட்டு அதை பவுன்ஸ் செய்துவிட்டு ‘நீ யாருன்னே எனக்குத் தெரியாதும்மா’என்று ரீல் விடும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு அபூர்வ மனிதர்.