சபரிமலைக்கு இளம் வயது பெண்கள் வரக்கூடாதுன்னு பெரியவங்க கட்டுப்பாடு வெச்சிருக்காங்க... ஆனா இது தடை கிடையாது... இதுல பெண் விடுதலை எங்கே இல்லாம போச்சு... என்று நடிகை ரஞ்சனி கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரை பெண்கள் வழிபட தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. 

5 நீதிபதிகளில் 4 பேர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று சபரிமலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பெண் விடுதலையின் அடுத்த கட்டம் என பல்வேறு அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், நடிகையும், சமூக ஆர்வளரும், கேரளாவை பூர்வீகமாக கொண்டவருமான நடிகை ரஞ்சனியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் ஆச்சரியமாகவே பார்க்கவில்லை. ஏனென்றால் வட இந்தியர்களுக்கு ஐயப்பனையும், தெரியாது.  நம் வழிபாட்டு முறைகளும் தெரியாது. 

நம் வழிபாட்ட முறை, ஆன்மீக முறை பற்றி தெரிந்த ஒருத்தர் நீதிபதியாக இருந்திருந்தால், இப்படியொரு முடிவெடுத்திருக்க 
மாட்டார்கள். பெண்களை வரவே வேண்டாம் என்று சொல்லவில்லை. 10 வயதுக்குள்ள வாங்க... இல்லன்னா 50 வயதுக்கு மேலே 
வாங்கன்னுதான் சொல்றாங்க... இங்கே ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாக யோக நிலையில் உட்கார்ந்திருக்கார். அவரை தரிசிக்க ஆண்கள் விரதமிருந்தும், அந்த நேரத்தில் மனைவியுடன் பழகாம இருந்தும் வர்றாங்க. அதனாலதான், சபரிமலையில் இளம் வயது பெண்களோட டிஸ்டபன்ஸ் இருக்கக் கூடாதுன்னு பெரியவங்க இப்படியொரு கட்டுப்பாடு வெச்சிருக்காங்க. இது கட்டுப்பாடுதான்... தடை கிடையாது.  இதுல பெண் விடுதலை எங்கே இல்லாம போச்சுன்னு எனக்கு புரியவில்லை என்று ரஞ்சனி காட்டமாக தெரிவித்தார்.