ரஜினியின் ‘ராஜா சின்ன ரோஜா’படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘மருது பாண்டி’,’ஒன்ஸ்மோர்’போன்ற படங்களில் நடித்தவரும் சீரியல்களில் முன்னணி நடிகையுமான ராகவியின் கணவர் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு சன் டிவியின் ‘மகாலட்சுமி’உட்பட பல முக்கியமான சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ராகவி. இவர் ரஜினியின் 1989ம் ஆண்டு வெளியான ‘ராஜா சின்ன ரோஜா’படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது அறிமுகமான ஒளிப்பதிவாளர் சசிக்குமார் என்பவரை எட்டு வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்று தெரியவந்தது. உடனே ஜோலார்பேட்டை போலீசார் ராகவிக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ராகவி, அவர் தனது கணவர்தான் என்று அடையாளம் காட்டினார்.

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த சசிக்குமார் கடன்சுமை காரணமாக, இவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிற்கு சொந்தமான கேமராவை, அடகு வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, அவருடன் பணிபுரியும் மகேஷ் என்பவருக்கும் சசிகுமாருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மகேஷ், சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை,’ கேமரா திருடன்’என வாட்ஸப்பில் பரப்பி வந்ததால் சசிகுமார் மனமுடைந்ததாகவும் அவர் மனைவி நடிகை ராகவி, போலீசில் புகார் அளித்துள்ளார். சசிக்குமாரின் இந்த மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.